Monday, 12 March 2012

சமுதாயத்தின் அடிப்படையாய்க் குடும்பம் விளங்குகிறது ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியாகி வாழ்வது குடும்ப வாழ்வின் தனிச் சிறப்பாகும். குடும்பம் செவ்வனே அமைவதற்குத் தலைவன், தலைவியரான தந்தை, தாய்க்குப் பல பொறுப்புகள் உள்ளன. இரு மாடுகள் சேர்ந்து வண்டியை இழுப்பது போல் கணவனும் மனைவியும் இணைந்து இல்வாழ்க்கைத் தேரை இழுக்க வேண்டியுள்ளது. இதனால் தாய், தந்தையரை மையமிட்டே ஒரு குடும்பத்தின் சிறப்பு அமைகிறது எனலாம்.
குடும்பம்
கணவனும் மனைவியும் ஒரு வீட்டில் இல்லத்தில் அன்பால் இணைந்து, பிள்ளைகளைப் பெற்று, பெருஞ் செல்வத்தையும், மக்களையும் உருவாக்க உறைந்து வாழும் இடமே குடும்பமெனலாம்.
"குடும்பம்" என்ற சொல்லுக்கு உறவு; ஓர் இல்லத்தில் உள்ளோர்; வீடு, மனை, குலம், குடி இனத்தார்; ஒரு குடிசையில் உள்ளோர் என்று அகராதிகள் பொருள் விளம்புகின்றன.
மனித சமுதாயத்தின் அடிப்படை "குடும்பம்" என்று சமூக இயலார் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது. குடும்பம் என்ற பெயரைக் குறிக்கும் "பேமிலி" என்ற ஆங்கிலச்சொல் "பேமுலஸ்" என்ற இலத்தின் மொழியிலிருந்து தோன்றியது என்றும், அதற்கு வேலைக்காரர்கள் என்று பொருள்படும் என்றும் சமூகவியல் கூறும்.
கணவன், மனைவி, பிள்ளை - கணவனைப் பெற்ற மாமன், மாமியார், கணவனோடு உடன் பிறந்தவர்கள் - இவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு, பாசம், தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகிய நற்பண்புகள் நிறைந்த ஓரிடமே குடும்பம் என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாகும்.
குடும்பம் உருவாகும் விதம்
சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்குவது குடும்பம். ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்ந்து அன்பால் இணைந்து வாழ்க்கை நலம் மேற்கொண்ட பிள்ளைகள் பெற்று ஒரு குடும்பத்தில் முதியோர்கள் கணவன், மனைவி, உடன் பிறந்தவர்கள் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் வாழ்வது கூட்டுக் குடும்பமாகும். முன்பு கூட்டுக் குடும்ப நிலை போற்றப்பட்டது. இன்று வளர்ந்து வரும் நாகரிகத்தின் காரணமாகவும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வேறுபாடுகள் காரணமாகவும் கூட்டுக் குடும்ப நிலை சிதைவுற்றுத் தனிக்குடும்பமாக மாறி வருகின்றது. கூட்டுக்குடும்பங்களில் சிக்கல்கள், பிரச்சினைகள், காரணமாகத் தனிக்குடும்பமாவதும் உண்டு. தனிக்குடும்பம் நடத்துவதில் சிக்கல்கள் பல தோன்றுகின்றன. பெரியோர் சொல் கேளாமை, குடும்ப வாழ்க்கை புரியாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் தனிக்குடும்பங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

No comments:

Post a Comment